Wednesday, October 5, 2011

Attitude worth following

மத்தியஸ்தர் :

இரண்டாண்டுகளுக்கு முன், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் மங்களூருக்குப் ப்ரயாணம் செய்து கொண்டிருந்த போது, எனக்கு அருகே இருந்த படுக்கை (Berth) எண் 55 -இல் ஒரு மத்தியதர வயதுடையவர் படுத்திருந்தார். ரயில் பாலக்காடு சந்திப்பை அடைந்த போது மணி இரவு ஒன்பது இருக்கும், பெரும் சந்தடிகளுக்கிடையே ஒரு பெரிய பக்தர்கள் குழாம் ரயிலில் ஏறியது. அவர்களில் ஒருவர், முன்பு குறிப்பிட்ட படுக்கை எண் 55 இல் படுத்திருந்தவரிடம், அது தனக்காக ஒதுக்கப்பட்ட படுக்கை எனவும், அதைத் தனக்கு கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். பிரயாண புக்கிங் ஏஜெண்ட் மூலம் அதற்கான அத்தாட்சியையும் பெற்றிருந்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், இரண்டாமவரிடம் அது அவருக்குண்டான படுக்கை அல்ல, ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தார், ஆனால் அதை அவர் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. இல்லை அது தமதே என்று இருவரும் வாதாடிக் கொண்டிருந்தனர். ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு காவலர் அங்கு வந்து, இரண்டாமவரை அப்புறப் படுத்த முயன்றார். ஆனாலும் பலனில்லை; அவருடன் வந்த மற்ற பிரயாணிகள் அவருக்கு ஆதரவாக வாதாடத் துவங்கவே, ஒரே கூச்சல்; குழப்பம்.

ரயில் பாலக்காட்டைத் தாண்டி, நான்கு ரயில் நிலையங்கள் கடந்த பிறகும் கூட, உச்சஸ்தாயியில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையே திரூர் ரயில் நிலையத்தைக் கடந்தவுடன் ஒருவர் அபாயச் சங்கிலியயப் பிடித்திழுத்து ரயிலையும் நிறுத்தி விட்டார். இவ்வாறான கடும் வாக்குவாதங்களால் யாராலும் தூங்க இயலவில்லை, நேரமும் நள்ளிரவைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

நடப்பவைகளை நான் நோட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், திடீரென, டீனேஜ் பருவத்திலிருந்த ஒரு கல்லூரி மாணவரைப் போன்ற தோற்றமுடைய ஒருவர், மாணவராகத்தான் இருக்க வேண்டுமென்பது எனது அனுமானம், தன்னுடைய படுக்கையிலிருந்து இறங்கி, அதை அந்த இரண்டாமவருக்கு விட்டுக் கொடுக்க முன்வந்தார். சிறிது நேரத் தயக்கத்திற்குப் பின்னர், அந்த இரண்டாமவர் அதனை ஏற்றுக் கொண்டார்.

என்னுடைய ஆச்சர்யத்தை அதிகப் படுத்தும் விதமாக, அவ்விளைஞர் சற்றும் யோசியாமல், செய்தித் தாளை தரையில் விரித்து அதில் படுத்ததோடல்லாமல், சிறிது நேரத்தில் அமைதியான, ஆழ்ந்த உறக்கத்திற்குள் தொலைந்தே போய்விட்டார். அதற்குப் பின் இதுவரை எதுவுமே நடவாததுபோல் ஒரு அமைதி நிலவியது. நான் 58 வயதாகும் ஒரு தாவரவியல் ஆசிரியர்; இரண்டு தலைமுறை மாணவார்களைக் கையாண்டிருக்கிறேன். பொதுவான அபிப்ராயங்களுக்கு மாறாக, பல சமயங்களில், பெரியவர்களை விடவும், இளைஞர்களே உயர்வான குணமுடையவர்களாக இருக்கிறார்கள்.

(மூலம் : ஃப்ரான்ஸிஸ் சேவியர், ஏற்காடு)

 

காலத்தினாற் செய்த உதவி :

1962 ஆம் வருடம், அக்டோபர் மாதம், எனது தந்தையார் திடீரென இறந்த வேளை, எனது பத்தாம் வகுப்பு பள்ளிப் படிப்பைத்தான் முடித்திருந்தேன். இனி கல்லூரிப் படிப்பென்பது கேள்விக்கப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. எனவே அப்போதிருந்த சூழலில், ஒரு குமாஸ்தா உத்யோகத்தைத் தேடிக் கொண்டேன். பத்தாண்டுகள் கடந்த நிலையிலும் அதே குமாஸ்தா உத்யோகம். 1971 ஆம் வருடம், என்னுடைய தனியார் நிறுவனத்தின் நிர்வாகத்தினர், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே அதிகாரிகளாகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என அறிவித்தனர். அச்சூழலில் எனக்குத் திருமணமாகி இரண்டு குழநநதைகள், மேற்கொண்டு படித்தால் மட்டுமே பதவி உயர்வு என்ற நிலையில், எனது உத்யோகம் எனக்கு ஒரு சூன்யமாகத் தெரிந்தது. பட்டப் படிப்பில் சேர்வதற்கும், நான் முதலில் பள்ளி மேநிலை இறுதியாண்டை முடிக்க வேண்டுமே!

பள்ளி மேநிலை முதலாண்டில் சேர்வதற்காக, அலிபூர் ரோடு, தில்லியில் இருக்கும் சிபிஎஸ்சி வழி தொலைதூரக் கல்வி அலுவலகத்திற்கு எனது வெஸ்பா ஸ்கூட்டரில் விரைந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. தபால் மூலமாகத் தொலைதூரக் கல்வியில் பதிவு செய்து கொள்ள அதுவே இறுதி தினம். அந்த அலுவலகத்திலிருந்த அனைத்து விண்ணப்பப் படிவங்களும் விற்றுத் தீர்ந்திருந்தன.

மிகுந்த ஏமாற்றத்துடன், அடுத்து என்ன செய்யலாம் என்று செய்வதறியாது அங்கு குழம்பி நின்று கொண்டிருநநத சமயத்தில், அங்கு வந்த ஒரு முதியவர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அவரிடம் நடந்ததைக் கூறி, நான் இக்கல்வியில் சேர, மேலும் ஒரு கல்வியாண்டு காத்திருக்க வேண்டும் என்ற சோகத்தைக் கூறினேன்.

பரவாயில்லை, உனக்கு உண்மையாகவே இவ்வயதில் மேலும் படிக்க ஆர்வமிருப்பின், என்னுடன் எனது வீட்டிற்கு வா! அங்கு ஒரு காலிப் படிவம் வைத்திருக்கிறேன், என்றார் அவர்.

அச்சமயம் நேரம் மதியம் 12.30. நிரப்பப்பட்ட படிவங்கள் பெறுவது பகல் 2 மணியோடு முடிந்ததுவிடும். அவருடைய வீடோ 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அதுவுமில்லாமல் அறிமுகமில்லாத நபரோடு செல்லவும் ஒருவித தயக்கம்.

எனினும் அச்சூழலில் கிட்டிய ஒரு நம்பிக்கையூட்டக் கூடிய வாய்ப்பைக் கைகழுவ மனமின்றி, அவரைப் பில்லியனில் அமர்த்திக் கொண்டு, அந்த நெரிசலான போக்குவரத்தினூடாக மிகவும் துரிதமாகச் சென்று அவர் வீட்டை அடைந்தேன்.

வீட்டை அடைந்ததும், எனக்கு குடிக்க நீர் கொடுத்து என்னை ஆஸ்வாசப் படுத்தினார். பதட்டப் படாமல் இருக்குமாறு கேட்டு கொண்டு, படிவத்தையும், பேனாவையும் கொடுத்து, அங்கேயே நிரப்புமாறும் கேட்டுக் கொண்டார். பிறகு விரைவாகவும், கவனமாகவும் சென்று படிவத்தைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் திரும்பவும் அலுவலகத்தை அடைந்த போது நேரம் சரியாக 1.58. எனக்கு முன்னரே மூவர் வரிசையில் படிவத்தைக் கொடுப்பதற்காகக் காத்திருந்தனர். நல்ல வேளையாக, என் படிவத்திற்குப் பிறகு, எவருடையதும் பெறப்பட மாட்டாது என அங்கிருந்த அதிகாரி அறிவித்தார்.

பிறகு மேநிலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, 1975 ஆம் ஆண்டு தில்லி பல்கலையிடமிருந்து பி ஏ பட்டமும் பெற்றேன். பிறகு நான் ஏங்கிய பதவியுயர்வுகளும் பெற்று, 1997 இல் சீனியர் அசிஸ்டெண்ட் மேனேஜராக ஓய்வு பெற்றேன். இன்றளவும், பெயர் கூடக் கேட்க மறந்த, சரியான சமயத்தில் உதவி செய்த அந்தப் பெரியவருக்கு நான் மிகவு கடமைப்பட்டிருக்கிறேன்.

(மூலம் : கோவிந்த் எஸ்.பட்நாகர், புனே)அடுத்த பகுதி ...

ஏழு வருடங்களுக்கு முன்னால், ஜெர்மெனிக்கு ஒரு பயிற்சிக்காக பதினைந்து தினங்கள் சென்றிருந்த வேளையில், ஒரு வார இறுதி விடுமுறையில் பிரான்ஸில் இருக்கும் லூர்தெஸ் என்ற இடத்திற்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். அப்பிரசித்தி பெற்ற இடத்திற்குச் செல்ல, நான் இருந்த இடத்திலிருந்து இரண்டு விமானப் பயணமும், ஒரு குறுகிய தூர ரயில் பயணமும் மேற்கொண்டாக வேண்டும். செல்லும்போது பயணம் மிகவும் இனிதாக அமைந்தது. லூர்தெஸில் செலவிட்ட தருணங்களும் இதயத்தை விட்டு என்றும் அகலாத, மகிழ்ச்சிகரமான ஒன்றாகும். ஆனால் ஜெர்மெனிக்குத் திரும்பும் பொழுது, லூர்தெஸில் எனது ரயிலைத் தவற விட்டேன்; அடுத்த ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

ஒருவாறு ரயிலைப் பிடித்து, விமான நிலையத்தை அடையும்போது அங்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய தினத்தின் கடைசி விமானம், நான் செல்வதாக இருந்த விமானம் கிளம்பி விட்டது. அந்நிய மண்ணில், முற்றிலும் கைவிடப் பட்ட நிலையில், கண்களில் கண்ணீர் ததும்ப செய்வதறியாது நின்றிருந்தேன். அன்றைய இரவை ஒரு ஹோட்டலில் கழிக்கக் கூட கையில் போதுமான பணமில்லாத ஒரு நிலை. அப்போது, அங்கு விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் இருந்த பிரெஞ்சுப் பெண்மணி, சற்று நேரம் காத்திருங்கள் என்று என்னைப் பணித்தார். எதற்காகக் காத்திருக்கச் சொல்கிறார் என்ற ஆச்சர்யத்துடன், அதே சமயம் வேறு வழியும் தெரியாததால், அவர் தமது வேலையை முடித்து விட்டு வரும்வரை காத்திருந்தேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் தமது வேலையை முடித்து விட்டு, வாருங்கள் என்னுடன், என் வீட்டிற்கு என்று என்னை அழைத்தார். பொதுவாகவே ஏர்லைன் செக் இன் கவுண்டர்களில் பணி புரிபவர்கள் அதிகம் மற்றவர்களோடு அநாவசியமாகப் பேச்சுக் கொடுப்பதில்லை; பழகுவதுமில்லை; தங்கள் பணியிலேயே மும்முரமாக இருப்பார்கள். இவரின் அழைப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி பேசவொட்டாமல் அடித்து விட்டது.

அவருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவருடைய பெயர் ஜேன் மேரி என்று அறிந்து கொண்டேன். அவர் நேராக என்னை தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருடைய இரு குழந்தைகளுடன் இரவு உணவை முடித்துக் கொண்டவுடன், நான் தூங்குவதற்கு ஏற்றவாறு வசதி செய்து தந்து விட்டு அவர் தமது பணிகளைக் கவனிக்கச் சென்று விட்டார். மறுநாள் காலை அவர் என்னை எழுப்பியதுடன், என்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். வழி நெடுகிலும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், ஊருக்குச் சென்றவுடன் அவருக்குத் தக்க சன்மானமும் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தேன்.

" தயவு செய்து எனக்கு நன்றி எதுவும் தெரிவிக்க வேண்டாம் " என்று கேட்டுக் கொண்ட ஜேன், இதே நிலை நாளை என் குழந்தைகளுக்கும் நேரலாம். இன்று நான் செய்யும் உதவி, நாளை என் குழந்தைகளுக்குத் தேவைப்படும் போது இறைவன் அவர்களுக்கும் அனுப்பி வைப்பார், என்றார்.

அன்றைய தினம் காலை முதல் விமானத்திலேயே என்னை அவர் அனுப்பி வைத்தார். அவருக்கு என்னால் முடிந்ததெல்லாம் அவருக்கான எனது ப்ரார்த்தனைகள்தான்.

(மூலம் : பமீலா பர்போஸா, ஹைதராபாத்)


என்னுடைய சிறு பிராயத்தில் நான் வளர்ந்தது முழுவதும், தமிழகத்தின் ஒரு கிராமப்புறத்திலுள்ள என்னுடைய தாத்தா வீட்டில். பள்ளியில் ஒரு சராசரிக்கும் கீழான மாணவனான நான், அங்கு பெரும்பாலும் என்னுடைய நேரத்தை பறவைகளையும், அணில்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதையும் வேடிக்கை பார்ப்பதிலேயே செலவிடுவேன். 1999 ஆம் வருடம், நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது, எங்கள் பள்ளிக்குப் புதிதாக வந்திருந்த தமிழாசிரியை திலகம் அவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். இன்னமும் அவர்களை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சற்றே குட்டையாக, குடும்பப் பாங்கான, சிறிய கல் பதித்த மூக்குத்தியுடன், நெற்றித் திலகமிட்ட களையான முகம்.வகுப்பில் ஒருநாள், அவர் என்னிடம் அன்றைய தினம் போதித்திருந்த பாடத்தின் ஒர்பகுதியை எழுந்து வாசிக்குமாறு கூறினார். என்னுடைய மனோதிடமும், தைரியமும் பஞ்சாகப் பறந்து விட்டன. என்னுடைய கைகள் நடுங்கத் துவங்கி விட்டன; வார்த்தைகள் வெளிவர மறுத்தன; ஒரு பாராவைப் படித்து முடிப்பதற்குள் சொல்லொணாத் தடுமாற்றங்கள்; என்னுடைய வகுப்புத் தோழர்கள் எள்ளி நகையாடியது என்னை மிகுந்த வெட்கத்திற்காட்படுத்தியது.“தமிழ் உன்னுடைய தாய்மொழிதானே? அதைச் சரளமாகப் படிப்பதில் உனக்கு என்ன பிரச்சனை?” என திலகம் அவர்கள் மிகுந்த வாந்துவத்துடன் என்னை வினவினார்.


நான் தலையைக் குனிந்தவாறே, படிக்கும் பொழுது தவறு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே நான் தடுமாறி விட்டேன் என என்னுடைய தவறை ஒப்புக் கொண்டேன்.அவர் என்னுடைய தோளில் தட்டிக் கொடுத்தவாறே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை. உனக்குப் பிடித்த கதைப் புத்தகங்கள், மற்ற புத்தகங்கள் எதுவாக இருப்பினும் படித்து, படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள். உன்னுடைய படிக்கும் பழக்கம் வளர்வதோடு, தடுமாற்றங்களும் ஏற்படாது என தைரியமூட்டினார்.சில மாதங்களில் அவருக்கு வேறு ஒரு அரசாங்கப் பணி கிட்டியது. அவர் எங்களுடைய வகுப்பறைக்கு கடைசியாக வந்திருந்து, எங்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்தினார்.எதிர்வந்த விடுமுறை தினத்தில், எனக்கு பிரபல தமிழ் எழுத்தாளரான சுஜாதாவின் நாவல் ஒன்று கிடைத்த்து. கூடவே திலகம் அவர்களின் அறிவுரையும் நினைவிற்கு வந்தது. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பின்பு அருகிலிருந்த சிறிய நகரத்திலுள்ள நூலகத்தில் என்னை சந்தாதாரராக இணைத்துக் கொண்டு, தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். இப்பழக்கவழக்கம் நாளடைவில் என்னை பள்ளியிலும், அதைத் தொடர்ந்து கல்லூரியிலும் சிறந்த மாணவனாக என்னை உருவாக்கிக் கொள்ள உதவியது. தற்போது, என்னுடைய இந்த 24 வயதில், நானும் ஒரு ஆசிரியராக மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறேன். இப்பொழுது திலகம் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நானிருக்கும் இன்றைய நிலைக்கு, அன்று திலகம் அவர்கள் எனக்கு வழங்கிய ஊக்கமும், அறிவுரைகளும் மட்டுமே காரணம்.

(மூலம் : சதீஷ் குமார், இவர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஸர்வ சிக்ஷா அப்யான் திட்டத்தின் கீழுள்ள பள்ளியில் சிறப்பு பயிற்றுவிப்பாளராக பணியாற்றுகிறார்.)

The articles appeared earlier @ http://idlyvadai.blogspot.com/

0 comments:

Post a Comment