Wednesday, December 23, 2009

Honesty

A mail I received today... hopes for honesty do rise

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப,எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி,அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

நன்றி........ ஆனந்த விகடன்

Kural:

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

Explanation :
Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.

http://kural.muthu.org/kural.php?kid=962&eid=1

0 comments:

Post a Comment